Saturday, June 22, 2013

போர்த் தொழில் பழகு







"வரலாறு என்பது வருடங்களை நினைவில் வைத்துக் கொள்வதற்காக அல்ல. நிகழ்வுகளை வருடிக் கொடுத்து வாழ்க்கையை வரவு வைத்துக் கொள்வதற்காக. சரித்திரம் திரும்ப நிகழ்வதில்லை. சம்பவங்கள் தான் வெவ்வேறு நபர்களால் மீண்டும் அரங்கேறுகின்றன. இன்றைய இளைஞர்கள் படிப்பை கெட்டியாய்ப் பற்றிக்கொண்டு மற்றவற்றை நழுவவிட்டு விடுகிறார்கள்.


'போர் வேண்டாம்' என்பதில் இரண்டாவது கருத்துக்கே இடமில்லை. ஆனால் 'போர்க்குணம்' எப்போதும் தேவை. இன்றைய வாழ்வு சூழ்ச்சிகள் நிறைந்த போர்க்களம்.


சிலரது வெடிச் சிரிப்பிற்குப் பின்னால் வெடிகுண்டுகள் ஒளிந்திருக்கும். சிலரது பணிவிற்குப் பின்னால் சதி வேலைகள் மறைந்திருக்கும். தந்திரங்களைத் தெரிந்து கொள்வது அவற்றைக் கையாளுவதற்கல்ல. மற்றவர்கள் கையாளும் போது அவற்றை கையாடுவதற்காக.


இன்று போட்டித் தேர்வும் போருக்கு ஒப்பானது வர்த்கக் களமும் பந்தயக் களமே! உத்திகள் வகுப்போரே வெற்றிகள் குவிப்பார். வியூகங்கள் வகுப்போரே சோகங்கள் தவிர்ப்பார்."


                                                                                                       -வெ. இறையன்பு







"போர்த் தொழில் பழகு" வெ. இறையன்பு அவர்களின் அற்புதமான, அனைவராலும் கொண்டாடப் பட வேண்டிய வியத்தகு படைப்பு. நாற்பது வாரங்கள் போரையும், வெற்றிவாகை சூடிய மன்னர்கள் கடைப்பித்த போர் நுணுக்கங்களையும், அவற்றை இன்றைய போட்டியும் சூழ்ச்சியும் நிறைந்த வாழ்வுடன் தொடர்புபடுத்தி புதிய தலைமுறையில் எழுதி வந்தார். இளைஞர்களுக்கு சக்தியூடிக் கொண்டிருந்த தொடர்  இப்போது நூலாக கோர்க்கப்பட்டு புதிய தலைமுறை வெளியிட்டு உள்ளது.

சமூகத்தை நாம் எவர் துணையும் இன்றி நேரடியாக எதிர் கொள்ளும் வரை POLITICS என்ற விஷயம், அரசியல் சம்மந்தப்பட்ட ஒன்று என்று நாம்
நினைத்தது அனைத்தும் தவிடு பொடியாகின. இன்றைய CORPORATE யுகம் நம்மை அறியாமலே நம்மை அதில் தள்ளி விட்டு வேடிக்கை பார்க்கிறது . அதைக் கையாளத் தேவையான  தெளிந்த அறிவு நம்மிடையே இல்லாத காரணத்தினால் அதை எதிர் கொள்ள முடியாமல் நிலைகுலைந்து விடுகிறோம். அன்றைய மன்னர்கள் கையாண்ட போர் முறைகள்  அனைத்தும் அறிவு என்னும் ஆயுதத்தைக் கொண்டே நடத்தப்பட்டுள்ளன.

அவற்றை இறையன்பு அவர்கள் பல உண்மை நிகழ்வுகளுடன் சுவையான சரித்திரக் குறிப்புகளுடன் பதுங்கிப் பாய், வலையை விரி, கவனத்தை திசை திருப்பு, பலவீனத்தைப் பந்தாடு, எதிரியாய் மாறு, முதலில் முஷ்டியை உயர்த்து, சாமுராய் யாய் இரு, புயலெனப் புறப்படு, எதிரியை களைப்படைய செய்...  இது போன்று மொத்தம் இருபத்தி மூன்று போர் உத்திகளை விளக்கி அதை எப்படி, எப்பொழுது, யாருக்கெதிராய் பயன்படுத்த வேண்டும் என்பதையும் தெளிவாக விளக்கியுள்ளார். இன்றைய சூழலில் அனைவரும் அவசியம் படித்துத் தெரிந்து கொள்ளவேண்டிய நல்லதொரு புத்தகம்.









"போர்த் தொழில் பழகு வாசித்தபிறகு இன்றைய இளைஞர்கள்

பாரதி போல் வீரமும்,
பகத்சிங் போல் துணிவும்,
வாஞ்சி போல் வைராக்கியமும்,
சிவா போல் சீற்றமும்,
சிவாஜி போல் தலைமையும்,
அக்பர் போல் வலிமையையும்,
பாபர் போல் பலமும்,
ராஜேந்திர சோழன் போல் அனைத்தும் பெற்று தன்னம்பிகையுடன் திகழ வேண்டும் என்பதே இந்த முயற்சியின் நோக்கம்"

                                                  
                                                                                          -வெ. இறையன்பு 

0 comments:

Post a Comment