Wednesday, June 3, 2015

இது ஜெயமோகனின் 'அறம்'



'அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்' என்று தவறு செய்யும் ஆட்சியாளர்களை கொன்று போடும் வல்லமை உடையது 'அறம்' என்று சிலப்பதிகாரத்தில் போற்றப்படுகிறது. திருவள்ளுவர் முப்பால்களில் முதல் பாலாக அறத்துப் பாலை வைத்தார். அறம் பாடுவது தமிழ் புலவர்களின் வலிமையான ஆயுதமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. அறிவை இழிவு படுத்தும் எவரையும் அறம் பாடி ஒழிக்கும் வல்லமையை தமிழ்ப் புலவர்கள் காலந்தோறும் கைகளில் வைத்திருந்தார்கள்.

இப்படிப்பட்ட அறத்தை ஒவ்வொரு கால கட்டத்திலும் இலக்கிய மேதைகள் அடையாளம் கண்டு சமூகத்துக்கு அறியத் தருகிறார்கள். அந்த வரிசையில் சில ஆண்டுகளுக்கு முன்பு சமகால இலக்கிய ஆளுமையான ஜெயமோகன், தன் வலைதளத்தில் 2011 ஜனவரியில் ‘அறம்’ என்ற சிறுகதையில் தொடங்கி வரிசையாக ஒரு ஒன்றரை மாதத்துக்குள் 12 (‘மெல்லிய நூல்’ என்ற சிறுகதையையும் சேர்த்தால் 13) சிறுகதைகளை எழுதி வெளியிட்டார்.

அந்தக் கதைகள் தொகுக்கப்பட்டு புத்தகமாகவும் வெளி வந்தன. அவரது வாசகரிடையே அக்கதைகள் பெருத்த வரவேற்பை பெறுவதற்கு அறம் குறித்த மானுடத்தின் தொன்ம தொடர்ச்சியே காரணம் என்றாலும் அந்தத் தொடர்ச்சியை கதறக் கதற பிடித்து வந்து அடையாளம் காட்டிய ஜெயமோகனது மேதைமை சாதாரணமான ஒன்றல்ல.




ஜெயமோகன்  இந்தச் சிறுகதைகள் அனைத்தும் ‘அறம்’ என்ற மையச்சரட்டில் கோர்க்கப்பட்டவை என்று பதிவு செய்கிறார். உண்மை மனிதர்களை அடிப்படையாகக் கொண்ட கதைகள் என்றும் சொல்லப்பட்ட இந்தக் கதைகள் அவரது இணையதள வாசகர்களுக்கு மிகப்பெரிய வரமாக இருந்தன. அவரது வாசகர் வட்டத்தையும் தாண்டிப் பலர் இக்கதைகளுக்காகவே ஜெயமோகனின் வலைத்தளத்துக்குச் சென்று அவரது எழுத்தை வாசிக்கத் துவங்கினர், அதில் நானும் ஒருவன்.

ஒவ்வொரு கதையும் அற்புதமாய் தொகுக்கப்பட்டுள்ளது. அறம் சிறுகதை தொகுப்பின் அனைத்துக் கதைகளும் ஜெயமோகனின் தளத்தில் இலவசமாக படிக்க முடிகிறது. இருந்தும் இந்நூலை வாங்கிச் சேகரிப்பதில் கொஞ்சமும் நட்டம் இல்லை. இது நிச்சயமாக நமது வாழ்வின் சேகரிப்பில் இருக்க வேண்டிய ஒரு நூலாகும். 

ஜெயமோகனின் ஏழாம் உலகம் ஒரு மாஸ்டர் பீஸ் என முத்திரை குத்தலாம். வாசகனை இந்த உலகில்  இருந்து வெறு ஒரு உலகத்திற்கு தூக்கிச் செல்லும் கதை அமைப்பைக்  கொண்ட படைப்பு அது. இந்த மனிதன் எப்படி தான் இதை எழுதினார் என இன்னமும் வியப்பு குறையாமல் இருக்கும் பொழுதே அறம் என்னை இன்னும் வியப்பின் ஆழத்தில் கொண்டு போய் விட்டது.




அறம் மொத்தம் 13 சிறுகதைகளைக்  கொண்ட தொகுப்பாகும். வாசகனின் உணர்ச்சிகளைத்  தட்டிச் செல்லும் படைப்பு மிக உன்னதமான படைப்பு. அறம் நூலின் ஒவ்வொரு கதையிலும் அத்தன்மை புதைந்துள்ளது. அறம் செய்யும் மனிதர்களை இவ்வுலகம் எவ்வளவு அந்நியமாக்கிவிட்டது என்பதை இக்கதைகள் நமக்கு உணர்த்துகின்றன.

இதில் யானை டாக்டர் எனும் சிறுகதை தனித்துவம் வாய்ந்தது. அக்கதை பிற மொழிகளிலும் மொழிப்பெயர்க்கப்பட்டு விழிப்புணர்வுக்காக இலவசமாக விநியோகிக்கப்பட்டது. தமிழ் இலக்கியத்தில் இக்கதைகள் அனைத்தும் மிக முக்கியமான நிகழ்வாகும். அறம் நிகழ்த்திய மனிதர்கள் பலரை நாம் அறியாமல் போனதற்கு காரணம் சமூகத்தின் அறமற்ற நிலைகளே  என்பதை  இக்கதைகள் உணர்த்துகின்றன.

முதல் கதையான அறம் என்னைக் கலங்கச் செய்தது. ஆனால் யானை டாக்டர் கதையை படித்தபோது மொத்தமாக மனம் உடைந்து போனேன். புழுக் குவியலில் யானைக்கு போஸ்மோர்டம் என்பது சற்றும் நினைத்துப் பார்க்க முடியவில்லை. கோவில் மற்றும் சர்க்கஸ்களில் யானையை நடத்தும் விதத்தை தவிர்க்க  டாக்டர் கே. வின் உரையாடல், அறம் சார்ந்த வாழ்வியலின் உயரத்தில் காணப்படுகிறார்.

நீண்ட நாட்களுக்குப் பின் யானை டாக்டர் கதை ஆழமான தாக்கத்தை உண்டாக்கியது. இரண்டு நாட்கள் அக்கதையை மீண்டும் வாசித்து ஏதோ ஒரு தேடலில் ஆழ்ந்து போனேன். அக்கதை என் சிந்தனையில் ஓடிக் கொண்டே இருந்தது. சில இடைவெளிக்கு பின்னரே மீதிக் கதைகளை வாசித்து முடித்தேன்.




இக்கதைகளிடையே உள்ள ஒற்றுமை என்ன என்று பார்க்கும்போது ஒன்று தோன்றுகிறது: இவை அனைத்துமே உண்மையாகவே வாழ்ந்த, நாம் அனைவரும் அறிந்த, அறிந்திராவிட்டாலும் முயன்றால் அறிந்து கொள்ளக்கூடிய, சமகால அல்லது சமகாலத்துக்கும் சற்றே முந்தைய வரலாற்றில் ஆவணப்படுத்தப்பட்ட மனிதர்களை நினைவூட்டும் பாத்திரங்களைக் கொண்ட கதைகள்,  ஆசிரியரே நேரடியாக நம்மிடம் சொல்லும் கதைகள். அதற்கு மேல்,  அவர்கள் தங்கள் வாழ்வில் உறுதியாக நம்பிய,  கடைப்பிடித்த அறம் என்ற உணர்வை தம் மையச் சரடாய்க் கொண்ட கதைகள் என்று கூறலாம்.

இலக்கிய வாசிப்பு கொஞ்சமும் இல்லாத பல நண்பர்கள் யானை டாக்டரைப் படித்து ரசித்ததையும் மனம் குழைந்ததையும் நானே நேரடியாக வியப்புடன் பார்த்திருக்கிறேன்.

நவீன, பின்நவீனத்துவ சிறுகதைகளில் பெரும்பாலானவை (குறிப்பாக, சிறுபத்திரிக்கைகளில் இன்று பதிப்பிக்கப்படுபவை) மனித மனதின் இருண்மையையும் கீழ்மையையுமே தங்கள் பேசுபொருளாகக் கொண்டிருக்கின்றன. இந்தக் காலகட்டத்தில்,பெரும் லட்சிய வேகம் கொண்ட மனிதர்களை நாயகர்களாகக் கொண்ட இக்கதைகள், என்னைப் பரவசத்தில் ஆழ்த்தின என்பதை ஒப்புக் கொள்கிறேன். அண்மையில் ஒரு பத்தாண்டுகளில் வெளிவந்த எந்தச் சிறுகதைத் தொகுப்பும் இப்படிப்பட்ட ஒரு அனுபவத்தை எனக்குத் தரவில்லை.




இக்கதைகள் வழியாக தன்னை மீட்டுக் கொண்டதாகவும், இன்னும் சொல்ல மகத்தான விஷயங்கள் நிறையவே உள்ளன என்றும் ஜெயமோகன் இக்கதைகளின் முடிவில் எழுதுகிறார்.  – தன் லட்சியங்களை மீட்க கடந்த காலத்தினுள் சென்ற ஜெயமோகன், அவருக்கான  என் காத்திருப்பு தொடர்கிறது...

அறம் சிறு கதைகளை படிக்க விரும்புவர்களுக்கு இதோ அந்தத்  தளம் 



--------------------------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment