"அவரவர் பிராப்தப் பிரகாரம் அதற்கானவன் ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பவன், என்றும் நடவாதது என் முயற்சிக்கினும் நடவாது. நடப்பது என்பதை என் தடை செய்யினும் நில்லாது. இதுவே திண்ணம். ஆதலின் மௌனமாயிருக்கை நன்று!"
- ரமண மகரிஷி
எழுத்துச் சித்தர் திரு. பாலகுமாரன் அவர்கள் எழுதிய, ஸ்ரீ ரமண மகரிஷி என்ற புத்தகத்தில். ரமணரின் வாயிலாக இவ்வாக்கியத்திற்கு மிக தெளிவான விளக்கத்தை தனக்கே உரிய எழுத்து வன்மையுடன் விளக்கியுள்ளார். இதோ அவரது எழுத்துக்கள் .
"அவரவர் பிராப்தப் பிரகாரம்- இந்த ஜென்ம விஷயங்கள், முன் ஜென்ம வினை காரணமாகத்தான் நடக்கின்றன. அதற்குத் தான் பிராப்தம் என்று பெயர். உனக்கு நடக்ககூடிய விஷயங்கள் திடுமென்று நடக்கக்கூடியது அல்ல! முன்பே முடிவு செய்யப்பட்ட ஒன்று.
இந்த மாதிரியான தொடர்ச்சியை யார் செய்கிறார்கள் ? அதற்கானவன் ஆங்காங்கு இருந்து ஆட்டுவிப்பவன். விதியை நிர்ணயிக்கக்கூடிய ஒரு மாபெரும் சக்தி. ஒரு கடவுள் தன்மை, உன்னிடத்தில் இருந்து கொண்டும், என்னிடத்தில் இருந்து கொண்டும், அனைவரிடத்தில் இருந்து கொண்டும் ஆட்டுவிக்கிறது.
என் கர்மவினைக்கு தகுந்தாற்போல் என்னை ஆட்டுவிக்கிறது. என்னை ஓரிடத்தில் உட்கார வைக்கிறது. உன்னை ஓரிடத்தில் உட்கார வைக்கிறது; விதியின் வலிய கரங்கள் நடத்துகிற நாடகம்.
எது நடக்காது என்று தீர்மானிகப்பட்டுவிட்டதோ, அதை எத்தனை முயற்சி செய்தாலும் நடத்தமுடியாது; எது நடக்க வேண்டும் என்றிருக்கிறதோ அதை எப்படியும் தடை செய்ய முடியாது. இது தான் முடிவு; இது தான் இறுதிநிலை; இது தான் சத்தியம்; இது தான் திண்ணம். எனவே மெளனமாக இருத்தல் நன்று!
இதை விட மிக அழகாக வாழ்க்கையின் தன்மையை எடுத்துக்காட்ட எவராலும் இயலாது.
ஞான விஷயத்தில் வளர்வதுமில்லை, தேய்வதுமில்லை, எல்லாம் தீர்மானிக்கப்பட்டுவிட்டது . வாழ்வு விதி முன்கூட்டியே எழுதப்பட்டுவிட்டது. நான் மாற்றிவிடுகிறேன் என்று எவர் கங்கணம் கட்டினாலும், அது நகைப்புக்குரிய விஷயம்.
மிகப்பெரிய சக்தியின் கீழ் எந்த வலுவுமற்றுச் சிறு துரும்பாக அசைந்து கொண்டு இருக்கிறோம். கர்வப்படுவதற்கும் கங்கணம் கட்டிக்கொள்வதற்கும் எந்த அவசியமுமில்லை.
இதை மனதில் இருத்திக்கொண்டால் எந்தவித கர்வமும் எழாது. நான் யார் தெரியுமா! நான் நினைத்தால்.... எதையும் மாற்றிவிடுவேன் போன்ற பேச்சே வராது. செய்யும் காரியத்தில் விருப்பு - வெறுப்பு இருக்காது. பலன் எதிர்பார்க்காது. அப்போது அந்தக் காரியம் மிகச் சிறப்பாகச் செய்யப்படும். கர்வமற்ற சீரான செயல்கள் உடைய வாழ்க்கை உன்னதமாக இருக்கும்.
அதுவே வாழ்க்கை. மற்றதெல்லாம் குழப்பங்கள்."
(நன்றி : "ஸ்ரீ ரமண மஹரிஷி" புத்தகம் - திரு.பாலகுமாரன் )
0 comments:
Post a Comment