Sunday, December 16, 2012

கவியரசரின் கருத்துக்கள்




ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கும் அவனது அனுபவ அறிவும் அல்லது அவன் முன்னோரது அனுபவங்களே காரணங்களாக அமைத்திருக்கின்றன. 

அப்படி கவியரசர் கண்ணதாசனின்  வெற்றிக்கு அவரது அனுபவங்கள் தான் படிக்கட்டுகள் அமைத்துக் கொடுத்திருக்கின்றன.

அப்படி அவரது அனுபவ மொழிகள் அடங்கிய புத்தகத்தைப் படிக்க நேர்ந்தது. வாழ்க்கைப் பயணத்திற்கு வெளிச்சம் அமைக்கும் வல்லமை கொண்ட பல கருத்துக்கள் அதில் இடம்பெற்றுள்ளன.

அதில் இருந்து சிலவை ...

  • உன்னைப்பற்றி மற்றவர்கள் பேசுவது அதிகமாகவும், நீ பேசுவது குறைவாகவும் இருந்தால், மற்றவர்கள் பேசுவது வளரும். நீ பேசுவதே உனக்குப் போதும் என்றால் நீ பேசிக்கொண்டே யிருக்கலாம்.
  • நோயாளியாக இருக்கும்போது, ஆரோக்கியமாக இருப்பவனைக் கண்டால், கோபம் வருகிறது, கடனாளியாக இருக்கும்போது வசதியுள்ளவனைக் கண்டால், ஆத்திரம் வருகிறது. தோற்றுப் போனவன் ஜெயித்தவனோடு கை குலுக்குவதன் பொருளென்ன? நீயும் ஒரு நாள் தோற்றுப்போக வேண்டும், என்று ஆசிர்வதிக்கவே !
  • தற்புகழ்ச்சி என்பது வேறொன்றுமில்லை. விற்பனையாகாத சரக்குக்குச் செய்யப்படும் விளம்பரமே!
  • மலர்களை எல்லோரும் விரும்புகிறார்கள். அதனால் தான் அவை சீக்கிரம் கருகிப் போகின்றன. மரங்களை எல்லோரும் விரும்புவதில்லை. எனவே தான் அவை நீண்ட காலம் வாழ்கின்றன. அதிகம் ஆசைவைக்கும் பொருளில் தான் சீக்கிரம் வெறுப்பு தோன்றுகிறது.
  • எதிர்காலத்தைச் சரியாகக்  கணக்கிட்டுவிட்டதாக நினைப்பவன், நிகழ்காலத்தைக் கோட்டை விடுகிறான். எதிர்காலம் ஒரு நாள் நிகழ் காலம் தானே !
  • தண்டனையை ஏற்றுக்கொள்ளுங்கள்; பரிசு வரப்போகிறது. பரிசை ஏற்றுக்கொள்ளுங்கள்; தண்டனை வரப்போகிறது. எது வந்தாலும் அமைதியாக இருங்கள், எதுவுமே வராது.
  • இருண்ட காட்டிலேயும் நீ தர்மத்தைத் தேடிக் கண்டு பிடித்து விட முடியும். ஆனால் கையில் பிடித்திருப்பது பேயா, தர்மமா என்பதை கண்டு கொள்ள உனக்கு புத்தி வேண்டும்.
  • அயோக்கியனை நீ சுதந்திரமாக விட்டுவிட்டால், அவனது அடுத்த வேலை யோக்கியனை கேலி செய்வதே!
  • அமைதியைத் தேடி எங்கெங்கோ அலைந்தேன். கால்கள் வலித்தன. ஓரிடத்தில் அமர்ந்தேன். அமைதி அங்கேயே இருப்பது அப்போது தான் தெரிந்தது.
  • ஒவ்வொரு மரணமும் அழுகையோடு முடிந்து விடுகிறது. ஒவ்வொரு பிறப்பின் அழுகையும் மரணத்தோடு முடிந்து விடுகிறது.
  • ஒரு விஷயத்தில் பிறரது அங்கீகாரத்தை நீ எதிர்பார்த்தால், அது "நீ முழு அறிவோடு சிந்தித்த விஷயமல்ல"என்று பொருள்.
  • நான் இறந்த பிற்பாடு, என்னையே நான் விமர்சனம் செய்து கொண்டால், இப்படித்தான் சொல்வேன். "முட்டாள்களிடையே வாழ்ந்து கொண்டிருந்த கெட்டிக்காரனொருவன் , கெட்டிக்காரர்களோடு பழகத் தொடங்கி, முட்டாளாகச் செத்துபோனான் "
                                                                                                                   -கவிஞர் கண்ணதாசன் 

இது போன்று 250 கருத்து மொழிகள் அதில் இடம் பெற்றுள்ளன. நிச்சயம் இந்தப் புத்தகம் வாழ்க்கை பற்றிய உங்கள் பார்வையை விசாலப்படுத்தும் . புத்தகத்தின் விலை 40 ரூபாய் மட்டுமே. எது எதற்கோ தேவை இல்லாமல் செலவு செய்யும் நாம் இது போன்று  அர்த்தமுள்ள விஷயத்திற்கு ஒரு முறையேனும் செலவு செய்வோமே!!!


புத்தகத்தின் தலைப்பு: செப்பு மொழிகள் 250

பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் 

பதிப்பாசிரியர்: காந்தி கண்ணதாசன் 



எல்லோராலும் எளிதாக படிக்கக் கூடிய கருத்துக்களின் தொகுப்பே இந்தப் புத்தகம். இந்தப் புத்தகத்தை நீங்கள் விரும்பும் நபருக்கு அன்பளிப்பாக அளியுங்கள் நிச்சயம் அது ஒரு நல்ல பயனுள்ள பரிசாக  இருக்கும்.



************************************************************************************************************************************************










0 comments:

Post a Comment