Tuesday, December 25, 2012

சித்தன் போக்கு சிவன் போக்கு




துறவி என்பவன் எவனுக்கும்  அடிமையானவன் அல்ல எதற்கும் பொறுப்பானவன்  அல்ல . அவன் எந்த நாகரீகத்திற்கும் கட்டுப்பட்டவன் இல்லை. எந்த  மதத்திற்கும் சொந்தமானவனில்லை. எந்த வித முறைகளுக்கும் அவன் அடங்கியது கிடையாது.

சித்தன் போக்கு சிவன் போக்கு என்று மக்கள் வரைக்கும் சொல்லும்படி மனம் போன பாதையில் அவர்கள் செல்வார்கள். அவர்களால் எந்த உயிருக்கும் இடைஞ்சல் இருக்காது. எந்த உயிரோடும் அவர்களுக்குத் தொடர்பில்லை. எவருக்கும் அவர்கள் கடன் பட்டவர்கள் இல்லை.

ஆனால் அவர்களது வாழ்வியல் சிந்தனைகள் அனைத்தும் நம் மனதை எளிதாகக்  கிழித்துக் கொண்டு அதன் கருத்தை ஆழமாக சிந்திக்க வைக்கும் ஆற்றல் கொண்டது.

அப்படி ஒரு கருத்தாழமிக்க பாடல் தான் இந்தப் பாடல் 

                பிறப்பதற்கு முன்னெல்லாம் இருக்குமாற தெங்ஙனே?
                பிறந்துமண் ணிறந்துபோய் இருக்குமாறு தெங்ஙனே?
                குறித்து நீர் சொலாவிடில் குறிப்பிலாத மாந்தரே.          
                அறுப்பென செவி இரண்டும் அஞ்செழுத்து வாளினால் 

                                                                                                 -சிவவாக்கியர் 

பொருள்:

"இந்தப் பூமியில் பிறப்பதற்கு முன்னே நீ இருந்த இடம் எதுவென்று உன்னால் சரியாகக் கூற முடியுமா ? இந்த மண்ணை விட்டு உன் உயிர் அகலும் போது அது செல்லும் இடத்தையாவது  நீ கூற இயலுமா ? உனக்கு முன்னால் சென்ற பலர் இப்பொழுது எங்குள்ளனர் என்று அறுதியிட்டுக் கூற முடியுமோ ?

எல்லா வற்றிற்கும் நேரம் குறித்து காலம் குறித்து, ஜோசியம், ஜாதகம் என்ற பெயரில் எதிர்காலத்தைக் கூடத்  துல்லியமாகக்  கணித்துக் கூற முடியும் என்று மார் தட்டிக்கொள்ளும் மனிதரே. பிறக்கும் முன்பும் இறந்த  பின்பும், என் காலத்தைக் குறித்து நீர் சரியாய் சொல்லா விட்டால் கூறிய வாளினால் உன் காதுகள் இரண்டையும் அறுத்து எரிவேன் இது சத்தியம்." என்று சிவவாக்கியர் பகுத்தறிவு பேசும் படிப்பாளிகளுக்கு சவால் விடுவது போல் தன் பாடல் மூலம் கேள்வியை வைக்கிறார்.


உள்ளார்ந்த அர்த்தம்:

மக்களுக்கு வாழ்க்கையை ஒட்டு மொத்தமாகப்  பார்க்கத்  தெரியவில்லை எங்கிருந்து வந்தோம், எப்படி வளர்ந்தோம், எவ்விதம் உயரப்போகிறோம் எப்படி முடியப்போகிறோம் என்கிற தொலை தூரத்துப் பார்வை இல்லை. கேளிக்கையிலே அவர்கள் மூழ்கி திளைத்து அது தான் வாழ்க்கை என்ற முடிவுடனே வாழ்ந்து வருகின்றனர் .

இன்றைய விஞ்ஞான உலகில் மனிதனால் முடியாதது எதுவுமில்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்திற்கும் அறிவியல் பூர்வமான பதிலைச் சொல்லி அகந்தையின் உச்சியில் ஏறி உட்கார்ந்து கொண்டிருக்கிறோம். 

மனித இனம் அனைத்தும் அறிந்தது ஆறறிவு படைத்தது நம்மால் எதற்கும் விடை கண்டுபிடித்து  விட முடியும் என்று நினைத்து, தன் இனத்தை மட்டுமே பெரிதாய் கருதிக்கொண்டிருக்கிறோம்.

சுவரில் இருக்கும் பல்லிக்கு எப்படி tubelight இன் செயல்பாட்டை விளக்க முடியாதோ, விளக்க முயன்றாலும் அதனால் புரிந்து கொள்ளவும் முடியாது. அதைப் பொறுத்த வரை ஒரு வெளிச்சம் வருகிறது திடீரென்று மறைகிறது அவ்வளவுதான். அதைப் போலத் தான் மனிதனும் என்ன தான் படிப்பறிவு பகுத்தறிவை வளர்த்திருந்தாலும், கடவுள் என்கிற தன்மையையும் அதன் படைப்பையும் அவனால் புரிந்து கொள்ளவே முடியாது.  

இங்கு பல்வேறு விதமான உயிரினங்கள்  இருக்கின்றன. விதம் விதமான கிரகங்கள் நகர்கின்றன. எல்லாம் மிகச் சரியான அளவில் நகர்கின்றன மிகத் துல்லியமாக ஒன்றின் மீது ஒன்று மோதாது நகர்கின்றன. எல்லாம் எங்கிருந்து கிளம்புகிறது.

செல்கள் உருவாகி மீனாக மாறி ஆமையாக உருவெடுத்து பூவாய், பறவையாய், பல்வேறு மிருகங்களாய், மனிதனாய் வளர்ந்தன. மிக நீண்ட காலகட்டத்தின் நடுமையத்தில் இருக்கிறோம். 

தோன்றியவை வளரும். வளர்ந்தவை உலர்ந்து மடியும். ஆனால் எப்படித் தோன்றியது. நிலை நிறுத்திய சுழற்சி ஆட்டம் எப்படி நடை பெறுகிறது. லட்சக்கணக்கான சுழல்களும் கிரகங்களும் சுற்றி வருகின்ற பாதையில் எந்த மாற்றமும் இல்லாமல் எவர் பிடித்து பூமியை மட்டும் மக்கள் வாழ்வதற்கு எதுவாக வைத்திருக்கிறார்.

இந்த பிரபஞ்சத்தின் மூலம் எது. இந்த பால் வெளியின் மையம் எது. ஆட்டுவிப்பவன்  யார். அறிவால் பதில் சொல்ல முடியவில்லை. அதுவும் திகைக்கிறது. 

மிகப் பெரிய சக்தியின் கீழ் ஒரு சிறு துரும்பாக சுழன்று கொண்டிருக்கிறோம் என்பதை நாம் உணர்ந்தால் போதும். மாற்றம் தானாக நிகழும்... நமக்குள் இருக்கும்  கர்வம், பொறாமை, கோபம் , வஞ்சம்  இன்னும் பல கொடிய குணங்கள் நீங்கி உள்ளத்தில் அமைதி எளிதாகப் படரும். 




1 comments: