Saturday, November 8, 2014

வாய்ப்பு



ஜகத்திரள்  என்னும் மந்தையில் ஜகம் என்னும் ஒரு சந்தையில் தனித்துலா வரும் விந்தை தான் யார் இவன்... ? புரையோடிப் போன சமூகத்தில் பொரைக்காக ஓடிக் கொண்டிருக்கும் சாமானியன் நான். இந்த மரணம் நோக்கிய பயணத்தில் வயது ஏற ஏற ஓடும் வேகமும் கூடுவதை உணரமுடிகிறது.

அவ்வப்போது இளை பாற நேரம் கிடைக்கும் போதெல்லாம் சமூகத்தில் உள்ள குறைகளை ஆராய்வதிலேயே பொழுது போகிறது. குறை கண்டுபிடிப்பது படித்தவர்களுக்கு மிகவும் பிடித்த விஷயம்... ஏனெனில் அப்போது தான் தனது பண்டிதத்தனத்தை மற்றவரிடம்  காட்ட முடியும். அப்படி பொருளாதார அரசியலைப் பற்றி சிந்திக்கும் போது கன நேரத்தில் உருவான ஒரு சிந்தனையையே இங்கே பதிவு செய்திருக்கிறேன்.

சமூகத்தில் நிலவுகின்ற பொருளாதார இடைவெளிக்கும், ஏற்றத்  தாழ்விற்கும்,ஒருவனிடம் வசதி இருப்பதற்கும் இல்லாமல் போவதற்கும் முக்கிய காரணம் சூழ்நிலைகளும், வாய்ப்புகளும்  அன்றி வேறேதுமில்லை.

ஒருவனுக்குக் கிடைக்கப்படும் வாய்ப்புகளே பல நேரங்களில் ஒருவனின் வெற்றியையும் வாழ்க்கையின் இருப்பு நிலையையும் தீர்மானிக்கிறது.




இது பலரால் பல நேரங்களில் உணரப்படாத காரணத்தினாலே இங்கே வேறு ஒரு ஆட்டம் நடந்து கொண்டிருக்கிறது. ஏதேனும் ஒரு துறையில் முன்னேறப் போராடிக் கொண்டிருப்பவனுக்குக்  கிடைக்கும் வாய்ப்பு, சில நேரங்களில் வெற்றியைத்  தந்து அவனை ஒரு படி மேல உயர்த்திவைத்து அழகு பார்க்கிறது. 

இந்தப்  பிரச்சனையின் மையம் என்பது இங்கே தான் துவங்குகிறது, வெற்றி பெற்றவனை அடக்கம் தொற்றிக் கொள்வதற்குப் பதில் கர்வம் தொற்றிக் கொள்கிறது. அதுவரை கடந்து வந்த பாதையை மறந்து 'நான்' , இது என்னால் நிகழ்ந்தது என்பது போன்றத்  தாந்தோன்றித்  தனமான சிந்தனைகள் அவனுக்குள்ளே படரத்  துவங்குகிறது. அது அவனை வாய்ப்புக்காக போராடிக் கொண்டிருப்பவனையும் , வாய்ப்பு கிடைக்காதவனையும்  ஏளனமாகப் பார்க்க வைத்து விடுகிறது.

நான் உயர்ந்தவன், நீ தோற்றவன் அதனால்  என்னைவிடக்  கீழானவன் என்பது போன்ற கோணல் பார்வையுடன் அவன் உலகத்தை அணுகத்  தொடங்குகிறான்.





ஆழ்ந்து சிந்தித்தால் இதில் கர்வம் கொள்வதற்கோ  அலட்டிக் கொள்வதற்கோ ஒன்றும் இல்லை. நம்முடைய சூழ்நிலையும் சந்தர்ப்பமும் நம்மை ஒரு இடத்திலும், இன்னொருவனை வேறொரு இடத்திலும் அமர்த்துகிறது அவ்வளவே. இதில் ஒப்பீட்டுக்கு இடமில்லை.

எதார்த்தத்தில் வாய்ப்புக்  கிடைத்தவன் கிடைக் காதவனுக்கு கை கொடுத்து உதவ வேண்டும். ஆனால் இங்கே அப்படி ஒன்றும் நடப்பதாய் தெரியவில்லை, நடந்திருந்தால் இவ்வளவு வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் பொறாமைகளும் வந்திருக்காது என்பது என் வாதம்.

வாழ்க்கை என்பது ஆயிரம் கால் மண்டபம், ஒரே நாளில் யாரும் கட்டி  விட முடியாது என்ற பொன்மொழிக் கிணங்க நண்பர்கள், உறவுகள், பெற்றோர்கள், வழிகாட்டிகள், பின்புலம்,பணபலம் இவை போன்று நிறைய விஷயங்களை உள்ளடக்கியதே ஒருவனின் வாழ்க்கை நிலை.

இதை விடுத்து தலைமுறை தலைமுறையாய்  சேர்த்த சொத்தில் தன்  வாழ்க்கையைக்  கழிப்பவனை சமூகம் மதிப்பதும், எந்தப் பின்புலமும் இல்லாமல் தன் கையை ஊன்றி  சொந்தக் காலில் நிற்கப் போராடுபவனை இழிவாகப் பார்ப்பதும்  எந்த வகையில் நியாயம்...?

இதைத்தான்  கண்ணதாசன் மிக அழகாகக் கூறுவார் " அயோக்கியன் வெற்றி பெற்றால் அவன் செய்யும் முதல் வேலை யோக்கியனைக்  கேலி செய்வதே"   

இந்த நிலை மாறுமா...? மாறாதா...? என்பதை என்னால் கணிக்க இயலாது, ஆனால் மாற்றத்திற்கான ஒரே வழி நாம் அதை உணர்ந்து கொள்வதே என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும் . 

இனி நம் வாழ்க்கைப்  பயணத்தில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரையும் அது ஒரு ஆட்டோ ஓட்டுனரோ, வாயிற்காப்பாளரோ, தெருவில் காய்கறி விற்பவரையோ, உணவகத்தில் சாப்பாடு பறிமாருபவரோ, சக ஏழை நண்பனையோ, ஊழியரையோ... ! யாரையேனும், கர்வம் கொண்டு இழிவாகப் பார்க்கும் முன் ஒரு கனம் சிந்திப்போம்!!!

எனக்குக்  கிடைத்த வாய்ப்பு அவருக்கும் கிடைத்திருந்தால்...!!!




மாற்றம் தேவை 


1 comments:

  1. இதற்கு தான் தன்னை போல் பிறரை நேசி என்பார்கள்...

    ReplyDelete