பாடல் : 5
இயற்றியவர் : கடுவெளி சித்தர்
இந்தப் பாடலைப் பரவலாக அனைவரும் அறிந்திருப்போம் ஆனால் இது ஒரு சித்தர் பாடல் என்பது நம்மில் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆம், இந்தப் பாடல் கடுவெளிச் சித்தர் அவர்களின் ஆனந்த களிப்பில் இடம்பெற்றுள்ளது...
இந்த பாடலின் ஆரம்ப வரிகளைத் தலைப்பாகக் கொண்டு, எழுத்தாளர் திரு ஜெயகாந்தன் அவர்களின் புகழ் பெற்ற சிறுகதை ஒன்று உண்டு "நந்த வனத்தில் ஒரு ஆண்டி". இந்தச் சிறு கதை தான் பிதாமகன் என்னும் திரைப்படம் உருவாக காரணமாக அமைந்தது.
"நந்த வனத்திலோர் ஆண்டி- அவன்
நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி- மெத்த
கூத்தாடி கூத்தாடி போடுட்டைத்தாண்டி!"
பொருள்:
நந்த வனத்தில் ஒரு பிச்சைக்காரன், ஒரு குயவனை வேண்டி, பத்து மாத காலம் காத்திருந்து பிச்சை எடுத்து உண்பதற்காக ஒரு தோண்டியைப் பெற்று வருகிறான். பத்து மாதம் துன்பத்தை அனுபவித்த பிறகு இறுதியாக அந்தத் தோண்டி அவன் கையில் கிடைக்கிறது . . . ஆனால் அந்த முட்டாள் பிச்சைக்காரனோ அதை அனுபவிக்கத் தெரியாமல் அனைவர் முன்னிலையில் அதை வைத்துக் கூத்தாடும் போது தவறி போட்டு உடைக்கிறான் .
உள்ளார்ந்த அர்த்தம்:
நாம் அனைவருமே பிச்சைக்காரர்கள் தான், நம் உடம்பு தான் அந்தத் தோண்டி, நாம் இறைவனிடம் எனக்கு மனிதப் பிறப்பை அளித்தருள்வாய் அப்பொழுது தான் என்னால் பல நல்ல காரியங்களைச் செய்ய இயலும் என்று வேண்டி பத்து மாதம் கருவறை சுவாசத்திற்குப் பிறகு இந்த பூமிக்கு வருகிறோம்.
வந்த மாத்திரத்தில் நாம் இறைவனிடம் வேண்டியதையும், இந்த உடல் எவ்வளவு உன்னதமானது என்பதையும் மறந்து விட்டு அளவில்லாமல் உண்பதும், வெட்டிப் பேச்சு பேசி பொழுதைப் போக்குவதும், நமது சிற்றின்பத்திற்கு தேவையான அனைத்து செயல்களையும் செய்து சுய நல வாழ்க்கையை மட்டுமே வாழ்ந்து மடிகிறோம்.
நாம் வாழ்கையில் ஒரு போதும், இந்த உடம்பை வைத்து இயலாதவர்களுக்கு நம்மால் முடிந்த உதவியை செய்வோம், என்ற எண்ணமே தோன்றுவதில்லை.
இந்தப் பாடலில் அவர் இறை வழிபாட்டை வலியுறுத்தவில்லை சக மனிதனுக்கு உதவு என்ற கருத்தை தான் முன் வைக்கிறார்.
0 comments:
Post a Comment