கோபிநாத் எழுதிய நீயும் நானும் என்ற புத்தகத்தில் இருந்து உயர்ந்த எண்ணத்தையும் நல்ல பண்பையும் மனதில் விளைவிக்கக் கூடிய நல்லதொரு சிந்தனை.
"நம் வாழ்க்கையில் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தியதில் நம் அருகில் இருக்கும் சாதாரண மனிதர்களுக்கு நிறைய பங்கு இருக்கிறது .
நம் வாழ்க்கையில், கல்வியில், தொழிலில், முயற்சிகளில், வாழ்க்கைப் போராட்டங்களில் பங்கெடுத்துக் கொண்டு மிகப்பெரிய, மிகச்சிறந்த மாற்றங்களை ஏற்ப்படுத்துவது மகா புருஷர்கள் அல்ல... அருகில் இருக்கிற சாமானியர்கள்தான். அவர்களை முக்கியமானவர்களாக நடத்துங்கள்!
யோசித்தால்கூட ஞாபகம் வர மறுக்கிற மனிதர்களுக்கு நாம் கொடுக்கிற முக்கியத்துவத்தையும்,மரியாதையையும் நம் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்ப்படுத்துகிற மனிதர்களுக்குப் பல நேரங்களில் தருவதில்லை. அவர்கள் நமக்கு அருகில் இருப்பதாலோ என்னவோ, அவர்களது மகத்துவம் மிகச் சாதாரணமாகப் பார்க்கப்படுகிறது.
வீட்டில் நடக்கிற வைபவங்கள், சுபகாரியங்கள் இவற்றில்கூட குடும்பத்துக்குள் இருக்கிற வி.ஐ.பி-க்கள் அல்லது வெளியில் இருந்து வரும் முக்கியஸ்தர்களுக்குத் தான் முதல் வரிசை தரப்படுகிறது. அவர்களின் ஆதரவு வேண்டும். அவர்களின் நன்மதிப்பைப் பெற வேண்டும், அதன் மூலம் எதிர்காலத்தில் சில காரியங்களைச் சாதித்துக் கொள்ள முடியும் என்று நமக்குள் ஏதோ ஒரு மனக்கணக்கு ஓடுகிறது.
எல்லோருக்கும் முக்கியமானவராக இருக்கும் ஒரு மனிதரின் நெருக்கமான நண்பராக நம்மைக் காட்டிக்கொள்வதன் மூலம் ஒரு சமூக அந்தஸ்து கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு தான் நம் நடவடிக்கைகள் நடக்கின்றன.
இந்த புத்திசாலித் தனமான திட்டத்திற்கு முன்னால் இந்த இடத்திற்கு உயரவும் வளரவும் உறுதுணையாய் நின்ற, இன்னும் நிற்கிற நல்ல மனிதர்கள் மறக்கப்படுகிறார்கள்.
இங்கு ஒரு விஷயத்தை ஆழமாகக் கவனிக்க வேண்டும். எல்லோரும் கொண்டாடும் அந்த முக்கியமான மனிதருக்கு நீங்கள் பத்தோடு பதினொன்றுதான்.
ஆனால், அருகில் இருக்கிற உங்களது பொருட்படுத்தாமையைக்கூட உணராமல் உங்களை நேசிக்கிற அந்த சாதாரண மனிதர்கள் தான் கடைசி வரை உங்கள் வாழ்க்கையில் பல சிறப்பான மாற்றங்களை உருவாக்கப் போகிறவர்கள்.
இந்த குணம் இளைஞர்கள் உலகம் வரை விரிந்துகிடக்கிறது. நிறையப் பணம் வைத்திருக்கிற, அதிகாரம் செய்யும் தகுதி இருக்கிற நண்பனைக் கொண்டாடத் தயாராக இருக்கும் பலரும்... எல்லாக்காலத்திலும் துணை நிற்கிற அந்த எளிமையான நண்பனைக் கொண்டாடுவது இல்லை. அவன் எப்படியும் என்னோடுதான் இருப்பான் என்ற அலட்சியமும் பொருட்படுத்தாமையும் இயல்பாகவே வந்து விடுகிறது.
நட்பிலும் சரி, உறவிலும் சரி பெரும்பாலும் பலம்கொண்ட மனிதர்களின் குறைகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. குற்றங்கள் மன்னிக்கப்படுகின்றன. அநேக நேரங்களில் கூடவே இருக்கிற நல்ல இதயங்களிடம் குற்றம் கண்டு விலகுவது நமக்கு சுகமாக இருக்கிறது.
அருகில் இருக்கிற மனிதன் அறிதானவனாக இல்லை என்பதற்காக அவன் முக்கியமானவன் இல்லை என்றுபொருள் கொள்ள முடியாது.
நீங்கள் ஒரு குறிபிட்ட நிலைக்கு வளர்ந்தபிறகு கிடைக்கிற உறவுகள் உங்களிடம் எதையோ எதிர் பார்க்கின்றன. உங்கள் வளர்சிக்காக உதவிய இதயங்களை அந்த காலகட்டத்தில் கவனிக்க தவறாதீர்கள்.
தவறுகளையும் குறைகளையும் மனிக்கவும் மறக்கவும் பழகுங்கள். எளிய மனிதர்கள் உங்களுக்குச் செய்தவற்றை அழியாத இதயப்பாறைகளில் செதுக்கி வையுங்கள். "
இதெல்லாம் சரி நான் யாரைக் கொண்டாட வேண்டும் என்று எனக்குத் தெரியலையே என்று குழப்ப நிலையில் உள்ளவர்களுக்கு இதோ ஒரு சிறிய வழிகாட்டி.
1.நீங்கள் கஷ்டப்பட்டபபோது துணை நின்று தோள்கொடுத்த ஐந்து நண்பர்கள் யார்?
2. நீங்கள் மிகவும் நேசிக்கிற... மரியாதை செய்கிற ஐந்து ஆசிரியர்கள் யார் ?
3. உங்களோடு நேரம் செலவழிக்க விரும்பும் ஐந்து நபர்கள் யார் யார் ?
4. உங்கள் வாழ்க்கைக்குத் தேவைப்படுகிற உபயோகமான விஷயங்களை சொல்லிக் கொடுத்த ஐந்து நபர்கள் யார் ?
5. அலுவலகச் சூழலில் ஏற்படும் சிரமங்களை, பணிச்சுமையை உங்களோடு யார் பகிர்ந்து கொள்கிறார்கள் ?
"I did learn it was the greatest thing in the life is to respect other peoples love than to respect yourself."
Little Milton quotes
0 comments:
Post a Comment