Saturday, January 5, 2013

பொறாமை





நமக்கு என்ன தேவை என்று நாம் நம்மைக் கவனிக்காமல் எதை எதையோ தேடிப்போக என்ன காரணம்?

பொறாமை காரணம். அடுத்தவரோடு நம்மை ஒப்பிடல் காரணம். எப்போதுமே அடுத்தவருடைய மறைவான ரகசியங்களை மறைந்து பார்த்துக் கொண்டிருப்பது காரணம். 

அடுத்தவருடைய முகத்தைப் பார்த்து, அவர் சிரித்தால் தான் சிரித்து, அவர் கோபப்பட்டால் தான் கோபப்பட்டு, அவர் வீடு வாங்கினால் தானும் வாங்க வேண்டும் என்று முற்படுவது என, தன் வாழ்க்கை முழுவதும் அடுத்தவருடைய கைகளில் கொடுத்து விட்டு இருப்பது காரணம். 

உங்களை நீங்கள் அதிகம் உயர்வாக நினைத்துக் கொண்டிருக்கிறபோது அல்லது உங்களை எல்லோரையும்விட மிகத் தாழ்மையானவர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறபோது தான் ஒப்பிடுதல் குணம் வருகிறது.

இந்த ஒப்பிடுதல் ஒரு பொறாமையை வளர்கிறது. இந்த பொறாமை வெகு எளிதில்  முகத்தின் லட்சணத்தையே மோசமாக்குகிறது. ஒரு கீழ் வெட்டுப் பார்வையையும் ஒரு கோணல் புத்தியையும் எளிதே கொடுத்து விடுகிறது.

மற்றவரைப் பற்றி தவறாக எடை போடுவது மட்டுமல்லாமல் உங்களை நீங்களே அறிவதற்கு மிகப்பெரிய இடைஞ்சலை இது ஏற்படுத்துகிறது.  

உங்களுடைய இயலாமையை  ஏற்றுக்கொள்ள முடியாமல், அடுத்தவரின் வெற்றிக்குப்  பின்னால் இருக்கும் முயற்சியை எளிதாக மறைத்து அதிர்ஷ்டம் என்று ஒற்றை வார்த்தையில் முடித்து விட்டு உங்களை நீங்களே சமாதானம் செய்து கொள்ளும் குறுகிய மனபான்மையை  வளர்த்துவிடுகிறது. 

ஒப்பிடுதல் செய்யச் செய்ய உங்களுக்குத்தான் வேதனை. ஒருவரின் வெற்றியின் ரகசியம் எது என்று தெரியாமலேயே, அவர்  உயர்வதைப் பற்றி மட்டுமே மனதுக்குள் பொருமி வேதனைப்படுவது எந்த விதத்திலும் லாபம் தராது.

அவன் MBA படிச்சிட்டு 40,000 சம்பளம் வாங்குறான்.  நல்லா வாழ்க்கைய அனுபவிக்கிறான் பா. நாமளும் தான் இருக்கோமே ஒன்னத்துக்கும்  லாயக்கில்லே.

சில நாட்களில், மச்சான் நானும் MBA படிக்கப் போறேன்டா, ஆமாண்டா நல்ல JOB OPPOURTUNITIES நல்ல சம்பளம்  வாழ்க்கையில செட்டில் ஆகிடலாம் மச்சி. இப்படிதான் எங்க மாமா  பையன் ஒருத்தன் MBA முடிச்சிட்டு இப்போ ஜெர்மனில இருக்காண்டா என  வரிசையாக வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் MBA படித்து முடித்தவர்கள் என்பது போல சர மாதிரியான உதாரணங்கள் வந்து குவியும். 

எல்லாரும் படிக்கிறாங்கடா   நீயும் படி என  அறிவுரைகள் வழங்கப்படும் . இங்கு தான் குழு மனப்பான்மை என்ற ஒன்று தொடங்கி தனித் திறமை நசுக்கப்படுகிறது. 

சச்சினைப் போன்று எ.ஆர். ரஹ்மானும்,  கிரிக்கெட் விளையாட்டில் எளிதில் வெற்றியும் நல்ல வருமானமும் கிடைக்கிறது  நாமளும் கிரிக்கெட் கற்றுக் கொள்வோம் என்று கிளம்பி இருந்தால். இன்று ஆஸ்காரின் மூலம்  தமிழகத்தை உலக அரங்கில் அவர் கௌரவபடுத்தியிருக்க முடியாது.

நமக்கு என்ன தெரியும் என்பதை மறந்து, என் சித்தப்பா பையனை போன்று, என் நண்பனைப் போன்று , பக்கத்து வீட்டு அண்ணனைப் போன்று நானும் அவ்வழியே சென்று வாழ்வின் வெற்றியை ருசிக்க வேண்டும் என்று நினைத்தால், நம்முடைய  அடையாளத்தை இழந்து தோல்வியை சந்திக்கும் போது பொறாமை ஒரு நோயாக மாறியிருக்கும்.

பலம் குறைந்தவர்கள் தான் ஒப்பீடு செய்து பார்க்கிறார்கள். ஒப்பீடு செய்யச் செய்ய இன்னும் பலம்  குறைந்து கொண்டே போகிறது.  ஒப்பிட்டு பார்ப்பது திகைப்பை ஏற்படுத்த, அந்த திகைப்பு சில சமயம் 'நான் ஜெயித்தால், எனக்கு வாய்ப்புக் கிடைத்தால், நான் மட்டும் அந்த விதமாக முன்னேறிவிட்டால்' என்று கனவுக்கு வலி வகுத்து விடும். கனவு இப்போது கையிலிருக்கும் வேலையையும் நழுவவிட வைத்து விடும்.

அடுத்தவரின் வெற்றி பொறாமையையும், அடுத்தவரின் தோல்வி  மகிழ்ச்சியையும் தருமேயானால், உங்களுக்கு உங்கள் வாழ்க்கை  பற்றிய தெளிவு இல்லை என்பதே பொருள்.



"சிலர் அல்லும் பகலும் சிறு கல்லாய்  இருந்து கொண்டு 
அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக் கொண்டார்,                                    
விழித்துக் கொண்டோர் எல்லாம் பிழைத்துக் கொண்டார். 
குறட்டை விட்டோர் எல்லாம் கோட்டை விட்டார்."
                           
                                                                         -பட்டுகோட்டை கல்யாணசுந்தரனார் 
                                                                 
     

........................................................................

 இந்த வீடியோப்  பதிவை தவறாமல் பாருங்கள்  நிச்சயம் இந்தக்  காட்சி உங்களுக்கு நல்லதொரு தீர்வையும் தெளிவையும் தரும். 



........................................................................






  

                                                  


0 comments:

Post a Comment