Sunday, March 17, 2013

எந்திரம் மனுஷரூபேணா ....


                                                                                                                                                           படைப்பு : 1

 



எந்திரம் மனுஷரூபேணா .... 



....................................................................................................................

"என்ன செல்வம், மொத நா வேலைக்கா சொக்கா எல்லாம் சோக்காகீது... ம்ம்  நடக்கட்டும் நடக்கட்டும்... நல்லா இருந்தாச் சரி" என்று போகிற போக்கில் பாராட்டுவது போல் தன் இயலாமையால் வரும் மனக்குமுறலை வார்த்தைகளில் வெளிக்காட்டிவிட்டுப் போனார் அண்டை வீட்டு அரங்கநாதன்.

அவன் வேலைக்குச் செல்லும் சில மாதங்களுக்கு முன்பிருந்தே இது போன்ற போலிப் பாராட்டுக்களை தன் சொந்தங்களிடமும் அண்டை வீட்டார்களிடமிருந்தும் வாங்கிக் கொண்டு தான் இருந்தான். 

அவனுக்கு நடிகர் திரு. கமலஹாசன் கூறிய வசனங்களில் மிகவும் பிடித்த ஒன்றும் அடிக்கடி அவன் முணுமுணுப் பதுமான வசனம் "மறதி  ஒரு தேசிய வியாதி". ஆனால் இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு அவரை என்றாவது சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் "ஐயா! மறதி அல்ல ஒரு தேசிய வியாதி. இன்றைய சூழலில் பொறாமை தான் மிகப்பெரிய தேசிய வியாதி" என்று சொல்லும் அளவிற்கு போலிப் பாராட்டுகளால் திணறிப் போய் இருந்தான்.



அது ஒரு மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனம், பல அடுக்கு மாடிகளைக் கொண்ட அந்த கட்டிடத்தைப் பார்த்தவாறே சற்று தயங்கிய படியே உள்ளே நுழைகிறான்.

அலுவலக மெய்க்காப்பாளர் அவனைப் பார்த்தும் பார்க்காதது போல் நாளிதழ் செய்திகளை படித்துக் கொண்டிருந்தார்.

 அவனாக எதாவது கேட்டால் பார்ப்போம்... என்கிற மனப்போக்கு இயல்பாகவே அவரிடம் தெரிந்தது.

அவன் முதல் நாள் மிரட்சியின் காரணமாக, சற்று தாழ்ந்த குரலில் சார்... சார்... என்று அவரை அழைக்க முயற்சித்தான். அவர் அப்போதுதான் அவனைக் கவனிப்பது போல்,
"யார் நீங்க, என்ன வேணும், யாரப்பார்க்கணும் என்று அடுக்கடுக்கான கேள்விகளை அவன் முன்பு வைத்தார்.

"நான் இங்க புதுசா வேலைக்கு சேந்திருக்கேன் HR அவுங்களப் பாக்கணும்"




"ஓ! புதுசா...! இப்டியே நேராப்போனா லிப்ட் லாபி வரும் மூணாவது மாடியில அஞ்சாவது கேபின்ல இருப்பாங்க அவுங்கதான் HR." என்று கூறி மீண்டும் நாளிதழைப் புரட்ட ஆரம்பித்தார். அவன் நன்றி என்று கூறி நடக்க ஆரம்பித்தான் ஆனால் அதை அவர் கண்டுகொள்ளவேயில்லை.

அவன் செல்கையில் அவர் சொன்ன ஒ!புதுசா... ! என்ற வார்த்தை மட்டும் அவனை என்னமோ செய்தது. ஏன்? புதுசென்றால் என்ன? அந்தக் கேள்விக்குப் பதிலை யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது இரண்டு பேர் லிப்டுக்குள் நுழைந்தார்கள். 

அவன் அவர்களைப் பார்த்துப் புன்னகைத்தான். அவர்கள் அதைக் கண்டு கொள்ளாதவாறு ஏதோ முக்கியமான கருத்துப் பரிமாற்றத்தில் ஈடு பட்டிருந்தனர். laptop, ipod, sema super model, nachu configuration, samsung, sony... இது போன்ற வார்த்தைகள் மட்டுமே அவன் காதுகளில் அதிகம் ஒலித்துக் கொண்டிருந்தது.

அலுவலகத்தின் உள்ளே நுழைந்தான். அலுவலகம் பரபரப்பாக இல்லாமல் மயானம் போன்று சலனமற்று இருந்தது.

வேலைக்கான அனைத்து தகவல்  பரிமாற்றங்களையும் முடித்து விட்டு தனக்கு கொடுக்கப்பட்ட இருக்கையில் கணினி முன்பு வந்து அமர்ந்தான்.

தனக்கு அருகில் இருப்பவர் தன்னிடம் ஏதேனும் அறிமுக வார்த்தைகள் பேசுவார் என்று எதிர் பார்த்து ஏமாந்து போனான்.

அவர் அந்தத் திரையில் நமிதாவின் நடனக் காட்சி எதோ ஒன்று ஓடிக்  கொண்டிருப்பதைப் போன்று கண் இமைக்காமல் திரையையே பார்த்துக் கொண்டிருந்தார்.

இவனும் அப்படி என்னதான் தெரிகிறது என்னும் ஆவலில் உற்றுப் பார்த்தான் இரண்டு நிமிடங்களுக்கு  மேல் அவனால் தொடர்ந்து அதைப்  பார்க்க முடியவில்லை.



அன்றைய பொழுது முழுவதும் யாரும் வந்து அவனிடம் எதுவும் பேசவில்லை. மாறாக அவனை கண்காட்சிப் பொருளாக வேடிக்கைப் பார்த்துப் போனார்கள். அப்படி அவனை  பார்க்கும் பொழுதெல்லாம் அவன் உடல் கூசிப் போனான். 

மாலை அலுவலகம் முடியும் நேரம் வந்தது, அன்று அவன் பேசிய வார்த்தைகள் மிகக்  குறைவு. மற்றவர்களும் அவ்வளவு தான் பேசி இருந்தார்கள்.  ஆனால் தன்னிடம் யாரும் பேசவில்லையே என்ற ஏமாற்றத்துடன்  லிப்டுக்குள் நுழைந்தான்.   

மீண்டும் லிப்டுக்குள் அதே இரண்டு பேர்... கடவுளே இம்முறை samsung, sony இது பற்றி மட்டும் வேண்டாமே  என்பது போல் வேண்டிக் கொண்டான். அவர்கள் பேச்சைத் தொடங்கினார்கள். 


"சார்! ஒரு குட் நியூஸ் நம்ம ஆபீஸ்ஸுக்கு ஒரு நியூ arrival ஒன்னு வந்திருக்கு சார்..."

செல்வத்திற்கு மனதில் சந்தோசம் தாங்க வில்லை. அட ! இவர்கள் பேசுகிறார்கள். அதுவும் புதிதாய் வந்த என்னைப் பற்றி . சரி மேல கேட்போம் என்பது போல்  அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தான்.

"என்னது சார் ! எனக்கு தெரியலையே சார் !... நீங்களே சொல்லுங்க."

"சார் புதுசா HIGH RESOLUTION HP SCANNER ஒன்னு வந்திருக்கு சார்... வித் HIGHER END CONFIGURATIONல இனிமே ஜாலி தான் போங்க."

"வாவ்! சூப்பர் சார் ரியலி இட்ஸ் அ  குட் நியூஸ் சார் இனி நமக்கு பிரச்னை இல்லை" என்றார் இரண்டாம் நபர்.

தரைத் தளம் வந்தது. லிப்ட் மட்டும் தரையைத் தொடவில்லை அவன் மனதில் தோன்றிய ஏக்கத்துடன்  கூடியதொரு  சின்ன ஆசையும் தரை தட்டியது.

அவன் கண்களில் நீர் தழும்ப சாலையில் வந்து நின்றான். அவ்வளவு மக்கள் கூட்டத்திலும்  தான் தனித்திருப்பதை போல் உணர்ந்தான்.

அப்பொழுது அவனை ஒரு ஆட்டோ கடந்து செல்வதை கவனித்தான். அதில் கீதையின் வாசகம் ஒன்று எழுதப் பட்டிருந்தது "தெய்வம் மனுஷரூபேணா"

அவன் மெல்லிய புன்னகையுடன், இல்லை, நிச்சியமாக இல்லை. இன்றைய உலகில் எந்திரங்கள் தான் மனுஷ ரூபத்தில் இருக்கின்றன. எந்திரங்களுடன் பழகிப் பழகி இவர்களும் எந்திரமாகிப் போய்விட்டார்கள்.

எந்திரங்களைப் புரிந்து கொண்ட அளவிற்கு மனித மனங்களை புரிந்து கொள்ள முடியாதவர்களாய் இருக்கின்றனர்.

அவன் கண்களைத் துடைத்துக் கொண்டு தானும் காலப் போக்கில் இப்படி எந்திரத்தனமாக மாறிபோவேனோ ? என்ற கேள்வியுடன் சாலையில் நடந்து சென்றான்.

எந்திரம் மனுஷரூபேணா ....     





**********************************************************

0 comments:

Post a Comment