இந்தப் பாடலை படித்த பின்பு பாரதி ஒரு கவிஞன் என்பதைத் தாண்டி அவர் ஒரு தீர்கதரிசி என்பது மிகத் தெளிவாக விளங்கும். பாரத ஜனங்களின் தற்கால நிலைமை என்று தலைப்பு வைத்திருந்தாலும் எக்காலத்துக்கும் பொருந்தும் வகையில் இருப்பது தான் இந்தப் பாடலின் சிறப்பு. இவர்கள் மனப்போக்கை என்றுமே மாற்ற முடியாது, அவர்களாகவும் மாறமாட்டார்கள் என்று எதிர்காலத்தை துல்லியமாக கணித்தே இந்த பாடலை இயற்றியிருக்க கூடும்.
பாரத ஜனங்களின் தற்கால நிலைமை
1. | நெஞ்சு பொறுக்கு திலையே-இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால், அஞ்சி யஞ்சிச் சாவார்-இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே; வஞ்சனைப் பேய்கள் என்பார்-இந்த மரத்தில் என்பார்;அந்தக் குளத்தில் என்பார்; துஞ்சுவது முகட்டில் என்பார்-மிகத் துயர்ப்படு வார் எண்ணிப் பயப்படுவார். | (நெஞ்சு) |
2. | மந்திர வாதி என்பார்-சொன்ன மாத்திரத்தி லேமனக் கிலிபிடிப்பார்; யந்திர சூனியங்கள்-இன்னும் எத்தனை ஆயிரம் இவர் துயர்கள்! தந்த பொருளைக் கொண்டே-ஜனம் தாங்குவர் உலகத்தில் அரசரெல்லாம்; அந்த அரசியலை-இவர் அஞ்சதரு பேயென்றெண்ணி நெஞ்சம் அயர் வார் | (நெஞ்சு) |
3. | சிப்பாயைக் கண்டு அஞ்சு வார்-ஊர்ச் சேவகன் வருதல்கண்டு மனம்பதைப் பார்; துப்பாக்கி கொண்டு ஒருவன்-வெகு தூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிப் பார்; அப்பால் எவனோ செல்வான்-அவன் ஆடையைக் கண்டுபயந் தெழுந்து நிற்பார்; எப்போதும் கைகட்டு வார்-இவர் யாரிடத்தும் பூனைகள்போல் ஏங்கிநடப்பார் | (நெஞ்சு) |
4. | நெஞ்சு பொறுக்கு திலையே-இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட் டால், கொஞ்சமோ பிரிவினைகள்?-ஒரு கோடிஎன்றால் அது பெரிதாமோ? ஐந்துதலைப் பாம்பென்பான் அப்பன் ஆறுதலை யென்று மகன் சொல்லிவிட்டால் நெஞ்சு பிரிந்திடுவார்-பின்பு நெடுநாள் இருவரும் பகைத்திருப்பார். | (நெஞ்சு) |
5. | சாத்திரங்கள் ஒன்றும் காணார்-பொய்ச் சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே கோத்திரம் ஒன்றாயிருந்தாலும்-ஒரு கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ்வார் தோத்திரங்கள் சொல்லி அவர்தாம்-தமைச் சூதுசெய்யும் நீசர்களைப் பணிந்திடுவார்; ஆத்திரங்கொண் டே இவன் சைவன்-இவன் அரிபக்தன் என்றுபெருஞ் சண்டையிடுவார். | (நெஞ்சு) |
6. | நெஞ்சு பொறுக்கு திலையே-இதை நினைந்து நினைந்திடினும் வெறுக்கு திலையே கஞ்சி குடிப்பதற் கிலார்-அதன் காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார். பஞ்சமோ பஞ்சம் என்றே-நிதம் பரிதவித்தே உயிர் துடிதுடித்தே துஞ்சி மடிக்கின்றாரே-இவர் துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே | (நெஞ்சு) |
7. | எண்ணிலா நோயுடையார்-இவர் எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார் கண்ணிலாக் குழந்தைகள் போல்-பிறர் காட்டிய வழியிற்சென்று மாட்டிக்கொள்வார்; நண்ணிய பெருங்கலைகள்-பத்து நாலாயிரங் கோடிநயந்துநின் ற புண்ணிய நாட்டினிலே-இவர் பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார் !!! |
0 comments:
Post a Comment