Saturday, August 9, 2014

அவமானம் தாங்கப் பழகு




மகத்தான எழுத்தாளரும், நமக்கு வாழ்கையை முறையானபடி வாழ கற்றுக் கொடுப்பவருமான எழுத்து சித்தர் பாலகுமாரனின் வெற்றி வேண்டுமெனில் என்னும் கட்டுரை தொகுப்பில் இருந்து  என்னைக்  கவர்ந்த தலைப்பில் இருந்து  சில வரிகளை, இதில் பகிர்ந்துள்ளேன். 




அவமானம் தாங்கப் பழகு 


"வாழ்க்கையில் உயர்வும் தாழ்வும் வெகு சகஜம். நல்லதொரு உயர்வின் மகிமையை அறிந்து கொள்ள தோல்வி என்கிற அனுபவத்தையும் பெறுவது நல்லது. வெற்றி என்றதும் பிறரால் அவமானப்படுத்துவது என்பதும் வரும். இது மிகப்பெரிய பாடங்களை நமக்கு சொல்லிக்கொடுத்துவிடும்.

அடுத்தவரின் உண்மையான முகம் நாம் அவமானப்படும்போது தெரியும்.

யார் நண்பர் யார் நண்பர் அல்லாதார். யார் நல்லவர், யார் கெட்டவர், அவருடைய உண்மையான முகம் எது? என்ற விஷயங்களெல்லாம் மிகத் தெள்ளத்தெளிவாகத்  தெரியும்.

நமக்கு ஏற்பட்ட நிறைய அவமானப்படுத்துதலுக்கு நமது வெற்றிகளே காரணமாக இருக்கும். வெற்றிகளை பொறுக்க முடியாதவர்களே நம்மை வெகு வேகமாக அவமானப்படுத்த முயற்சிப்பது தெரியவரும்.

நம்மை அவமானப்படுத்த செயல்படும் பலபேர் இவைகளை மிக ரகசியமாகவே செய்கிறார்கள். வேறு யாரையாவது முன்னிறுத்தி பின்னால் நின்று இயக்குகிறார்கள்.

இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் நம்மோடு வாழ்ந்த மனிதர்கள் நம்முடைய உயர்வு கண்டு பொறாமை படத்தொடங்குகிறார்கள்.

அநேகமாக அவர்கள் பொறாமை மிகுதியால் அவமானப் படுத்துகிறார்கள். எப்போதும் வாழ்க்கையில் நம்முடைய சுற்றம் தான் எதிரிகள். எதிரிகள் என்று எவரும் தனியாக உருவாவது இல்லை.

என்கூட பம்பாயில் பிளாட்பாரத்துல வியாபாரம் பண்ணிட்டு இன்னிக்கு ஒரு கடைக்கு முதலாளியாயிட்டா விட்டுருவோமா? உதைப்போம். உன்னப் போய் முதலாளின்னு  கூபிடுறாங்களே  எனக்கு வயிறு எரியுது என்று சண்டை போட்ட மனிதர்களை நான் அறிவேன்.

கடைக்கு முதலாளி ஆனவனுடைய உழைப்பும் கம்பீரமான காத்திருத்தலும் பிளாட்பாரத்தில் விவரம் கெட்டத்தனமாய் அலைகிறவனுக்குப் புரியவில்லை.

நன்றாக வளர்ந்த பிறகும் ஒரு வம்பு சண்டைக்காரனுடன் மல்லுக்கு நிற்க வேண்டியது இருக்கிறது. அதை வேடிக்கை பார்க்கும் நாலு பேருக்கு பதில் சொல்ல வேண்டியது இருக்கிறது.

ஆனால் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம். இம்மாதிரியான மனிதர்களை நாம் எதிர்கொள்ளத்தான் வேண்டும். ஆனால் இந்த அவமானத்திற்கு பயந்து விடக் கூடாது.

என்ன செய்ய வேண்டும் ?




கோபப்படவேண்டும் நிதானமாகக் கோபப்பட வேண்டும்.

பாரதி ரௌத்திரம் பழகு என்று சொல்கிறார். ரௌத்திரம் என்ற வட சொல்லுக்கு வெஞ்சினம் என்று பொருள் கொள்ளலாம்.

வெறும் சினம் அல்ல. மிகக் கடுமையான சினம். காரியமாற்றும் சினம். பதிலுக்கு என்ன செய்வது என்று திட்டமிட்டு அவமானம் செய்தலை எதிர்க்கும் சினம்.

அவமானம் நண்பர்களால் ஏற்பட்டாலும் உறவுகளால் ஏற்பட்டாலும் அந்நியர்களால் ஏற்பட்டாலும் நெல்முனையளவும் கவலை கொள்ளாதீர்கள்.

எதனால் இது ? எங்கு தவறு ? வேண்டுமென்றே செய்யப்படுகிறதா? அல்லது விவரமில்லாத விஷயமா ? என்பதை யோசித்து மிக வேகமாக ஒரு முடிவு எடுங்கள்.

எதிர்க்க முடியாத சூழலில் எதிர்ப்பைக் காட்ட முடியாத நிலையில் கூட உங்களுக்கு கடும் அவமானம் ஏற்படும். அப்போது அவமானத்தை நன்கு அனுபவியுங்கள். அவமானப்படுத்துதலை  புரிந்து கொண்டு அதற்கு அழாது கண்ணீர்விட்டு கதறாது உள்ளே இறுக்கி கொள்ளுங்கள்.

உங்களை அவமானப் படுத்தியவரை ஒரு போதும் மன்னிக்காதீர்கள். மஹா கவி பாரதியின் வரிகளை நினைவில் கொள்ளுங்கள். 

                             "பாதகம் செய்பவரைக் கண்டால்  நீ பயம் 
                             கொள்ளலாகாது பாப்பா 
                             மோதி மிதித்துவிடு பாப்பா "

அவருக்கு எதிரே வெற்றி பெற்று சிரித்து சிலாகித்து நில்லுங்கள். அவர் தானகக்  குன்றிப்  போவார்.

அவருக்கு முன் ஜெய்த்து நலமா ? என்று விசாரியுங்கள் அவர் மனம் உடனே செத்துப் போகும்.

பழி  வாங்குதலில் மிகச் சிறந்த விஷயம் நீங்கள் திரும்ப  திரும்ப வெற்றி காண்பதே. 

வாழ்வில் வெற்றி வேண்டுமெனில் அவமானப்படுங்கள் அவமானத்திற்கு அஞ்சாதீர்கள்.  அவமானம் ஒரு  உரம், கடுமையான உரம், காரமான உரம். அதனாலென்ன உரம் தானே ?  " 















  

3 comments: