Friday, September 12, 2014

பாலகுமாரனின் சிந்தனைகள் - பகுதி 1


எழுத்துக்களின் மூலம் என்னை செதுக்கி வாழ்க்கையை பற்றிய நிதர்சன புரிதலையும், தேடலையும் எனக்குள் விதைத்த எழுத்து சித்தர்  ஐயா பாலகுமாரன் அவர்களின்  சிந்தனைகளை  பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 





மிகவும் உற்றுக் கவனித்தால் நமது தேவைகள் மூன்றாம் மனிதரின் பாராட்டுக்காக ஏற்பட்டவை.மற்றவர்கள் பொறாமையோடு பார்ப்பது நம்மில் பலருக்குப் பிடித்த விஷயம்.

----------------------------------------------

வாழ்க்கை என்பது எளிதே அல்ல. அது நமது கற்பனைகளுக்கும். கணக்குகளுக்கும் அடங்காதது. மிக நுண்ணிய சிக்கல்கள் கொண்டது. மேலோட்டமாய் நுனிப்புல் மேய்கிறவர்கள் வாழ்க்கையில் ஜெயித்ததாய் சரித்திரமில்லை. கற்பனையில் வாழ்ந்து தான் கற்பனை செய்து கொண்டதே உண்மை என்று நினைத்துக் கொண்டிருக்கிற வாலிபர்களும். யுவதிகளும் அவஸ்தைப்படாமல் மீண்டதில்லை. -மனசே மனசே கதவைத்திற

----------------------------------

அகம்பாவம் தான் எல்லா பிரச்னைக்கும் அடிப்படை காரணம். அகம்பாவம் தான் மிகப் பெரிய அறியாமை. தனக்கு எல்லாம் தெரியும் என்கிற திமிர் தான் வாழ்க்கையை புரிந்து கொள்ள ஒட்டாமல் செய்கிறது. புரிந்தவர் மீது பொறாமை வருகிறது. புரியாத போது ஆத்திரம் வருகிறது. மனிதனை, மனிதனுடைய கர்வத்தை அசிங்கமாக்குவது மரணம்.

---------------------------------

மகிழ்ச்சி என்பது கார், பங்களா, காசு, பணத்தில் இல்லை. நன்றாக உண்டு நன்றாக தூங்க முடிகிறதா என்பதுதான் மிக முக்கியம். உண்மையிலேயே உங்களைப் பற்றி அக்கறைப்படுகிற, அன்பு காட்டுகிற மக்கள் இருக்கிறார்களா என்பதுதான் முக்கியம்.- பொறாமை அகற்றல். வெற்றி வேண்டுமெனில்

-------------------------------

எவ்வளவு கொடுக்கிறோமோ அவ்வளவு வாங்குகிறோம். அடி விழுவது அத்தனையும் அடி கொடுத்ததன் விளைவு.-திருப்பூந்துருத்தி

-----------------------------------

ஜெயித்தலோடு எந்த யுத்தமும் முடிவதே இல்லை. வெற்றிக்குப் பிறகே யுத்தம் கடுமையாகிறது. எதிரி மூர்க்கமாகிறான். கூர்மையாகிறான். யுத்தம் முடிந்து போய் பழிவாங்குதல் வந்து விடுகிறது. வெற்றி பெற்றவர் அசரவே முடியாது போகிறது. தோல்வியை விட வெற்றிதான் பெரிய வேதனை என்பது பலருக்குப் புரியவில்லை.

--------------------------------------

இந்த உலகம் தந்திரமுள்ள உலகம். இதில் நல்லது கெட்டது, சரி தவறு என்று எதுவுமில்லை. தந்திரத்தோடு இருப்பது சில சமயம் வெற்றியிலும் கூட முடயும். ஒரு விஷயத்தின் முடிவு தந்திரத்தில் இல்லை. அது இறைவன் கையில் இருக்கிறது. நீ எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறாயோ அப்படியே இரு. எல்லோரும் மற்றவர் விருப்பத்தில் இருக்கிறார்கள். நீ என்ன படிக்க வேண்டும் என்னவாக மாறவேண்டும் என்று உன்னை கேட்டுக்கொள். -மனசே மனசே கதவைத்திற

------------------------------------

பொறாமைப்பட்ட மனம் புலம்பலாகத்தான் இருக்கும். தூக்கமற்றுத் தவிக்கும். புலம்பலும் தூக்கமற்ற நிலையும் வேலை செய்வதிலுள்ள மும்முரத்தை குறைக்கும். கையிலிருக்கிற வேலை அல்லது உங்கள் தொழில் இதில் முழுமையாக ஈடுபட முடியாமல் போய்விடும். பொறாமைப்படுதலே தொழிலாக மாறிவிடும் -பொறாமை அகற்றல்,வெற்றி வேண்டுமெனில்

--------------------------------------

உண்மையாய் பேச, மென்மையாய் வாழ பலபேருக்கு தெரியவில்லை. அப்படி வாழ்வதில் விருப்பமும் இல்லை.

---------------------------------------

அதிகாரம் கொடி கட்டிப் பறக்குமிடத்தில் அன்பான கெஞ்சல்கள் எடுபடாது. அங்கே அன்பு காட்டுதல் அவமரியாதை போல் ஆகிவிடுகிறது. -ஒன்றானவன்,சிறுகதை

-----------------------------------------


உங்களைப் பற்றி சிந்திக்க சிந்திக்க உங்கள் பலமும் பலவீனமும் தெரியும். எப்போது இவை தெரிகிறதோ அப்போது உங்கள் பலத்தை நீங்கள் உயர்த்திக்கொள்ள முடியும். உங்கள் உடல்பலம், மனோபலம், புத்திபலம் உயர உங்கள் வாழ்க்கை நிலையும் உயரும். --- கதை கதையாம் காரணமாம்.


-------------------------------------

உலகத்தில் எந்த உயரினமும் ஒன்றை விட ஒன்று உயர்ந்ததே இல்லை. சகலமும் ஒரே விஷயம். உண்ணும் உணவால், வடிவத்தால் இயற்கை சூழ்நிலையால் உருவங்கள் மாறலாமே ஒழிய இலையில் இருக்கும் புழுவும், மனிதனும் ஒன்றே. இதில் கர்வப்பட ஒன்றுமில்லை. --- குன்றிமணி


---------------------------------


வாழ்க்கை என்பது பிறர் பேசுவதைக் கேட்டு,நடப்பதைப் பார்த்து தன் அனுபவத்தை ஒப்பிட்டு தானாய் புரிந்து கொள்வது. எல்லாம் தெரிந்து இங்கு பிறந்தவன் எவருமில்லை. அப்படிப் பிறப்பவனை கடவுள் என்று உலகம் கொண்டாடுகின்றது. அவன் யுகத்துக்கு யுகம் அவதரிப்பான் என்று உறுதி கூறுகிறது. மற்றபடி, மனிதர்கள் அறிவுரை கேட்டு அதை அனுபவத்தில் தோய்த்து மேற் கொண்டு நடப்பவர்கள். அறிவுரையை கேட்கமாட்டேன் என்று சொல்பவன் நிர்மூடன்.சொல்லமாட்டேன் என்பவன் அகம்பாவி. இங்கே நீ கற்றதனைத்தும் பிறர் எச்சம்.பிறர் வாழ்ந்து அனுபவித்ததின் மிச்சம். -கடலோரக்குருவிகள்.


---------------------------------------

















0 comments:

Post a Comment